இது அல்லவோ கட்டுப்பாடு! இது அல்லவோ ஸத்ஸங்கம்!!

மாதுரீஸகீ ஸமேத ஸ்ரீ ப்ரேமிகவரதனின் ப்ரும்மோத்ஸவம் பத்து நாட்கள் முடிந்தவுடன் அதே கையோடு இந்த மடலை எழுதுகின்றேன்.  “ஒவ்வொரு நாமத்வாரிலும் மற்றும் அங்கங்குள்ள கேந்த்ராக்களிலும் கண்ணன் பிறந்த நாளை கொண்டாட வேண்டும். அதுவே, என் ஆசை.  நீங்கள் மதுரபுரி ஆஸ்ரமத்திற்கு வருவதை விட உங்கள் ஊரில் நாமத்வார் விழாவில் கலந்துகொள்வதில்தான் நான் மகிழ்ச்சி அடைவேன்” என்று எழுதினேன்.  மந்திரத்திற்குக் கட்டுப்பட்டவர்கள்போல் அனைவரும் கட்டுப்பட்டார்கள்.   அந்தந்த நாமத்வாரைச் சேர்ந்தவர்கள் அந்த அந்த இடத்திலேயே கொண்டாடினார்கள்.  கேந்திராவிலும் கொண்டாடினார்கள். ஒருவர்கூட அதை மீறவில்லை.  சென்னையை அடுத்துள்ள நாமத்வார் மற்றும் கேந்த்ரா பக்தர்கள்கூட வரவில்லை.

இப்படி ஒரு கட்டுப்பாட்டுடன் நமது ஸத்ஸங்கம் இயங்குவதுதான் நமக்கு பெருமை! அதுவே பலம்! சொல்லப்போனால், இந்தமுறை ஆஸ்ரமத்தில் கூட்டமே இல்லை. ஆனாலும், தினமும் ஒவ்வொரு நாமத்வாரில் நடக்கும் விஷயங்களின் புகைப்படங்களும், செய்திகளும் வரும். அவைகளைப் பார்த்து ஆனந்தப்படுவேன்.  அதுபோல், ஸத்ஸங்கம், பல கேந்திராக்களின் சார்பிலும் நடைபெற்றது. அவைகளின் புகைப்படங்களும் செய்திகளும் வரும். அவைகளைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்தேன். மேலும் மேலும், வருடா வருடம் இந்தக் கண்ணனின் பிறந்தநாளை இன்னும் விமர்சையாகவும், பலரும் கொண்டாடும்படியும், பலரும் கலந்துகொள்ளும் படியாகவும் நடத்த வேண்டும்.

இந்த வருடம் ஜகன்னாதர் ரத யாத்திரையும் நன்றாக நடைபெற்றது. கண்ணன் பிறந்த நாளும் நன்றாக நடந்தது.   இதற்கு பல பக்தர்கள் இரவு, பகல் பார்க்காமல் உழைத்துள்ளனர். உடல், பொருள், ஆவி எல்லாவற்றையும் அர்ப்பணித்துள்ளனர். பகவான், தனக்காக தாங்கள் அன்புடன் செய்யும் சேவைகளை கவனித்து வருகின்றான்.  அதற்கான அருளை நமக்கு உரிய காலத்தில் தருவான். பகவான், தன்னை அண்டிய பக்தர்களை தன்னுடைய இரு கைகளுக்குள் வைத்துப் பாதுகாப்பான்.  அவனுடைய நாமம், நம்மை ஒருக்காலும் கைவிடாது.  நம்முடைய ஆன்மீக உணர்வு தட்டி எழுப்பப் பட்டுள்ளது. மேலும் மேலும், ஹரி நாமத்தாலும், குரு சேவையாலும் வளரட்டும்.

எப்பொழுதும் குறையில்லை! எப்பொழுதும் எங்கும் நிறைவுதான்!

ராதே! ராதே!

–       மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜி

Post Your Comments

  • sridhar venkatachari September 13, 2018, 1:26 pm

    Radhe Radhe Jai Sri Gurunath!

  • P.RAJESH-SIVAKAASI September 17, 2018, 2:54 am

    satgurunath maharajki jai.radhe radhe